Monday, December 28, 2009

பொங்கல் வாழ்த்து அட்டைகள் - ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே !

மதம், மொழி சார்ந்த பண்டிகை சிறப்பு தினங்களுக்கு நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ வாழ்த்து அட்டைகளை அனுப்புவதை மறந்துவிட்டோம்.
இன்றைய அவசர வாழ்வில் நாம் வாழ்த்து அட்டை அனுப்ப மறந்ததற்கு காரணம், விஞ்ஞான வசதி. விஞ்ஞான வசதியால் நேர சிக்கனம், காசும் சிக்கனம். கைப்பேசியிலேயே வாழ்த்து சொல்லியும், குறுஞ்செய்தி அனுப்பியும் நம் வாழ்த்தை நம் அன்பின் வெளிப்பாட்டை இலவசமாக முடித்துவிடுகிறோம்.

வாழ்த்து அட்டைகள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியும், பூரிப்பும், அதில் இருக்கும் ஓவியங்களும், புகைப்படங்களும், அவை ஏற்படுத்தும் நினைவலைகளையும், குறுஞ்செய்திகள் ஏற்படுத்துவதில்லை.

குறுஞ்செய்திகள் நிரம்பிவிட்டால் யாரோ அனுப்பிய செய்தியை அழித்துவிட்டுத்தான் புதிய செய்திகளை பெறவேண்டி உள்ளது. ஆனால் வாழ்த்து அட்டைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவுகளை மலரச்செய்யும் நினைவுச் சின்னமாய் கூட இருக்கும்.

பள்ளி பருவத்தில், நண்பனுக்கு தெரியாமல் புத்தகத்தில் பொங்கல் வாழ்த்து வைப்பது. நாலாம் வகுப்பு படித்த தோழியின் பையில் அவளுக்குப் பிடிக்காத நடிகை சில்க்சுமிதா பொங்கல் வாழ்த்தை வைத்து அதைப்பார்த்த அவள் "டீச்சர் இந்த அசிங்கத்தை யாரோ வச்சுட்டாங்க" என்று அவள் அழுவதை ரசித்தது.

பொங்கல் முடிந்து எங்கள் வீட்டிற்கு இத்தனை வாழ்த்து வந்தது உறவினர் பெர்யரிச் சொல்லி இது எவ்வளவு அழகாக இருக்கும். பார் இது எங்க மாமா ஆந்திராவில் இருந்து எனக்கு அனுப்பின பொங்கல் வாழ்த்து என பெருமை பேசுவது உண்டு.

தெருவில் பிடிக்காத வீட்டிற்கு அஞ்சல் வில்லை ஒட்டாமல் அனுப்புவது, அந்த வீட்டார் அதை அபராதம் கட்டி வாங்கி அனுப்பியது யார் என்று தெரியாமல் குழம்பி அதை அவர் எல்லோரிடமும் சொல்லக் கண்டு களிப்பது.
பக்கத்து வீட்டுக்கு வாழ்த்து அனுப்புவது அதை தபால்காரர் பக்கத்து வீட்டிற்கு தரும்போது நம்மைப் பார்க்கும் கடுப்பான பார்வையில் ஒரு மகிழ்ச்சியென ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்து சுவையான விளையாட்டு நினைவுகளை தந்திருக்கின்றன.

குடும்பங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை இல்லாவிட்டாலும், அந்த வீட்டு குழந்தைகளுக்கு நம் வீட்டு குழந்தைகளின் பெயர்போட்டு வாழ்த்து அட்டை அனுப்புவது உண்டு. அதைப் பெரியவர்கள் கண்டும் காணாமல் விடுவதும் விட்டுப்போன பேச்சுக்கள் தொடர்வதும் உண்டு.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எனக்கு பொங்கல் வாழ்த்து அட்டை வந்தது. அனுப்பியது யார் என்றுத் தெரியவில்லை. வாழ்த்தில் அவரது முகவரி இல்லை. அவரது கையெழுத்தும் புரியவில்லை. அந்த மர்ம நண்பரின் பொங்கல் வாழ்த்தை ஒவ்வொரு பொங்கலுக்கும் எதிர்பார்த்து ஏமாறுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.

வெளிநாட்டில் வாழும் கணவனின் பிறந்த நாளுக்கோ, பண்டிகைக்கோ வாழ்த்து அட்டை புரட்டும் விரலிலும் தேடும் ஏக்க அன்பையும் கண்டிருக்கிறேன்.

காதல் தான் இன்று வாழ்த்து அட்டையை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நட்பில், காதலில், வாழ்த்து அட்டை அளிப்பது உறவை வலுப்படுத்த முன்மொழிவின் அடையாளம். காதலர்க்கு வாழ்த்து அட்டை செல்லம். பெரும்பாலானோர் வாழ்த்து அட்டை மூலமே தங்கள் காதலை உணர்த்தி இருக்கிறார்கள்.

நட்பில், குடும்ப உறவில் மகிழ்ச்சியூட்டும் ஒன்றான வாழ்த்து அனுப்பும் செயலை நாம் கைவிட்ட நிலையில் வாழ்த்து அட்டை சூட்சமத்தை உணர்ந்து கொண்டு வணிக நிறுவனங்கள் அதை கையில் எடுத்துள்ளன.
ரம்ஜான், தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகளுக்கு வாழ்த்து அனுப்புவதை கட்டாயப்பணியாக செய்கின்றன. தமிழ்நாட்டில் வணிகம் செய்து கொண்டு தமிழ்ப் பண்டிகைக்கும், தமிழ் வாடிக்கையாளர்க்கும் ஆங்கிலத்தில் வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்றன.

தீபாவளிகளை கொண்டாடும் அளவிற்கு நாம் நம் பொங்கலை கொண்டாடுவதில்லை. முன்பு கடைவீதியில் தீபாவளிக்கு வெடிக்கடை இருக்கும் அளவிற்கு பொங்கல் வாழ்த்து கடைகள் இருந்தன. இன்று வாழ்த்துக் கடையை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

தீபாவளிக்கு ரூ.100/- முதல் ஆயிரக்கணக்கில் வெடிவாங்கும் நாம் 2 ரூபாய் முதல் கிடைக்கும் பொங்கல் வாழ்த்தை பத்து உறவுக்கோ நட்புக்கோ நம்மால் அனுப்ப முடியவில்லையே ஏன்?

வாழ்த்து ரூ.2 + ரூ 4(அஞ்சல்)=ரூ6/-
10 நபர்க்ஷ்6=60 ருபாய் விரையமென நினைக்கிறோமோ?

ஏர்க்கலப்பை, சட்டக்கலப்பை, பிரம்பு பலகை, ஏன் கதிர் அரிவாள் என உழவுக்கருவிகள் பல கண்காட்சிக்கு சென்றுவிடும் நிலையில், பொங்கல் வாழ்த்து அட்டைகள் தான் நம் மண்ணின் வாழ்வியலையும் ஏன் விவசாயத்தையும் நினைவு படுத்திவருகின்றன.

பொங்கல் அடுப்பு வைத்து, மண்பானை பொங்கல் வைக்கும் நம் மரபையும், வாழ்த்து அனுப்பும் மனப்பங்கையும் விட்டொழித்து வருவது நமது வாழ்வியலை அழிக்கும் செயல். நமது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் குற்றம்.

நம் மண்ணின் நல்ல மரபை மறந்து, நன்றி மறந்தவராய் இருக்கிறோம் வாழ்த்து அனுப்பியவர்க்கு கூட நன்றி வாழ்த்து அனுப்புவதில்லை.
கடையில் நன்றி வாழ்த்து கேட்டேன் ( மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனம்). எல்லோரும் நமக்கும் நன்றியோடு இருக்கணும்னு எதிர்ப்பர்க்கிறோம். ஆனால் நாம யாருக்கும் நன்றியோடு இருப்பது இல்லை.

நன்றிகெட்ட உலகத்துல...
நன்றி கார்டு விக்குமா சார்!
நன்றி கார்டால நஷ்டம் சார், இப்ப
நன்றி காடெல்லாம் வருவது இல்ல சார், என்றார்.
நன்றியாய் இருந்தால் நஷ்டமா?

நம் மண்ணின் குணம் வாழ்த்துவது. வாழ்த்து அனுப்புவது நம்மை நிலைநிறுத்தும் அடையாளமாகத் தான் கருதுகிறேன்.

2 comments:

கபிலன் said...
This comment has been removed by the author.
கபிலன் said...

நிஜம் தான். தேடிப் புடிச்சு பொங்கல் வாழ்த்து வாங்கின காலம் எல்லாம் மாறிப் போச்சு. இண்டர்னெட், எஸ்.எம்.எஸ் தான் இப்போ வாழ்த்துக்களின் தூதுவர்களா இருக்கு. என்ன தான் இருந்தாலும், கடைக்கு போய், தேடிப் புடிச்சு, அட்ரெஸ் எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி,வாழ்த்து அட்டை அனுப்புவது என்பது ஒரு தனி இன்பம் தான். அந்த இன்பம் மற்றவைகளில் கிடைக்காது.