Monday, February 1, 2010

இப்படியெல்லாம் கேட்டா யாருக்குத் தான் கோவம் வராது ?

எங்க ஊர் கிராமம். தெருப் பெண்களிடையே சலசலப்பு, எரிச்சல், கோபம், கூச்சம், என பல உணர்வு நிலைமுகங்களோடு பெண்கள் நின்றனர்.

என்னவென்று கேட்டேன்.

என்னத்த சொல்றது என்றாள் ஐந்தம்மா. என்னா கேள்வி கேட்குது அந்த பொம்பளப்புள்ள....கொஞ்சகூட வெக்கம் இல்லாம....

நிறையபேரு இப்படிதா கேள்விகேட்டு எழுதிட்டு போறாங்க... என்னத்த செஞ்சு கிழிச்சாங்க. இது ஒரு பொழப்புபோல.

தெருமுனையில் இளம்வயது பெண்களும், ஆண்களும் நிற்க, அவர்கள் சுகாதாரம், கழிவறை குறித்து கணக்குஎடுக்க வந்திருந்தார்கள்.
(இவர்களுக்கு உதவ ஊராட்சித்தலைவரும், மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட்டுள்ளார். இந்தக் கருத்துக்கணிப்பை நடத்துவது வெளிநாட்டுப் பல்கலைக் கழகம்.)

பெண்களிடம் தனியாக கேள்விகேட்க, தனிப் பெண்கள் குழு வந்திருக்கிறார்கள். அந்த படிவத்தில் 131க்கும் மேல் கேள்விகள் இருந்தன. அவற்றில் சில.

மாப்பிள்ளை பார்க்கும்போது அவர் உங்களுக்கு வீட்டில் சுகாதார வசதி செய்துதர முன்வந்தாரா? இதுசம்மந்தமாக பேச்சுவார்த்தை அப்பொழுது நடந்ததா?
எங்கு நீங்கள் குளிப்பீர்கள்?
வீட்டுடன் உள்ளமூடிய குளியலறையா? என 8 கேள்விகள்.
இந்த இடத்தில் குளிப்பதுபற்றி என்ன உணர்கிறீர்கள்.
அதில் ஒரு கேள்வி (சமயம், கலாச்சாரம் சார்ந்தது)

என்ன இடைவெளியில் குளிப்பீர்கள்?
தினமும்,
வாரத்திற்கு 2 (அ) 3 முறை
வாரம் ஒரு முறை
மாதம் ஒரு முறை


பொதுவாக ஒரு நாளில் எந்த நேரத்தில் குளிப்பீர்கள்?
ஆடை இல்லாமல் குளிப்பீர்களா?
எங்கு நீங்கள் கழிப்பிடத்திற்கு செல்வீர்கள்?
இந்த இடத்தை பற்றி என்ன உணர்கிறீர்கள்?
(10 கேள்வி) அதில் ஒன்று
சமயம் மற்றும் கலாச்சாரத்தை சார்ந்ததாகும்.

இந்த இடத்தில் வாடை (அ) பூச்சி உள்ளதா?
பொதுவாக எந்த நேரம் மலம் கழிக்க செல்வீர்கள்?
நாள் ஒன்றுக்கு எத்தனை முறை சிறுநீர், மலம் கழிப்பீர்கள்?
சிறுநீர் கழிக்க தனியாக செல்வீர்களா (அ) உடன் யாரையாவது அழைத்து செல்வீர்களா?
கழிப்பிடம் போகும்போது காலணி அணிவீர்களா?

கழிப்பிடம் சென்றபின் எப்படி சுத்தம் செய்வீர்கள்
தண்ணீரால் கழுவுதல்
கற்கல் மற்றும் இலை
மண்ணால் சுத்தம் செய்தல்
சுத்தம் செய்வது இல்லை

கழிப்பிடம் சென்றபின் உங்கள் கைகளை சுத்தம் செய்வீர்களா?

இப்படியெல்லாம் கேள்விகேட்டா நம்மஊர் பொம்பளைங்க கோபப்படாம என்ன செய்வாங்க.

இப்போது கேட்கப்படும் கேள்விகள் நீங்கள் மாதவிடாயின்பொழுது என்ன செய்வீர்கள் என்பது பற்றியது. எங்களுக்கு தெரியும் இதுபோன்ற தனிப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில்கூற விரும்பமாட்டிற்கள் என்று. ஆனால், எங்கள் ஆய்விற்கு உங்களது கருத்து மிகவும் உபயோகமாக இருக்கும் என கேள்விகள் தொடர்கின்றன.

இன்னும் உங்களுக்கு மாதவிடாய் நடக்கிறதா?
மாதவிடாய் ஏற்படும்போது என்னமாதிரியான பாதுகாப்பு செய்வீர்கள்?(துணி, பஞ்சு, நேப்கின்)
எத்தனை முறை துணியை மாற்றுவீர்கள்?
எப்படி அந்த துணியை துவைப்பீர்கள்?
எப்படி அதை அப்புறப்படுத்துவீர்கள்?
துணியை தூக்கி எறிவதற்கு முன்பு மாதவிடாயின்போது பாதுகாப்பிற்காக எவ்வளவு நாட்கள் அந்த துணியை பயன்படுத்துவீர்கள்?

பெரும்பாலும் இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை. காரணம் சுகாதார விழிப்புணர்வு இல்லை. தங்களுடைய சுத்தம் பற்றி பெண்கள் அக்கறை கொள்வதில்லை, வெளியே பேசுவதும் இல்லை.

பழைய ஜாக்கட்டையும், உள்பாவாடையும் கைப்பிடி துணியாக பயண்படுத்தும் சமையல் கட்டுகள் நிறைய இருக்கின்றன. இயற்கை உபாதை, உபாதையால் ஏற்படும் துண்பம் குறித்து வெளியே பேசாத பெண்கள் இருக்கின்றார்கள்
இதற்கு கிராமம் நகரம் என்று பாகுப்பாடு கிடையாது.
அ.வெண்ணிலாவின் வரி(லி)களைத்தான் சொல்ல தோன்றுகிறது.

காக்கைக்குத் தெரியாது
எருதின் வலி
சரிதான்
எருதுகளுக்காவது தெரியுமா?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தொலைக்க வேண்டியது பெண் என்ற அடையாளத்தைத்தான்.

பயணங்களில் பெண்கள் உபாதை கழிப்பதைப்பற்றி சிந்திப்பது இல்லை. சுற்றுலா செல்லும் வாகனங்கள் நீர்நிலைகளில் நிறுத்திவிடுகிறார்கள். பெண்களை பற்றி சிந்திப்பது இல்லை.

முற்போக்கு இலக்கிய வாதிகளின் இலக்கியகூட்டம் முதல் மாநாடு நடத்தும் அமைப்புகள், கட்சிகள் வரை, பெண்கள் கழிவறை குறித்தோ தங்கும் வசதி குறித்தோ அக்கறை கொள்வதில்லை.

பகலில் சென்னைக்கு பேருந்தில் பயணித்தபோது பேருந்துடயர் வெடித்துவிட்டது. டயர் மாற்றும் வேலை நடந்தது ஐன்னல் ஓரம் பெண்கள் உட்கார்திருக்க அதுகுறித்தான எந்த உணர்வும் இல்லாமல் ஆண்கள் சிறுநீர் கழிக்கிறார்கள்.

எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வேகமாய் இறங்கி திரும்பி திரும்பி பார்த்து வரிசையாய் நின்ற ஆண் கூட்டத்தை கடந்து சாலைஓரம் சென்று சுடிதாரை அவிழ்த்து உட்காந்தார். அவ்வளவுதான் அங்கிருந்த ஆண்கூட்டம் தலைதெரிக்க ஓடியது. கர்மம் கர்மம் பட்டப்பகல்ல மானம்போச்சு கலிகாலம் இப்படி ஆணவ வார்த்தைகள் ஆங்காங்கே எழுந்தன.

அந்தபெண் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அந்த பெண்ணின் உடல்நிலை சரிஇல்லாம் இருக்க வேண்டும். பேருந்து நின்ற இரண்டு ஊர்களிலும் ஓட்டுனரிடம் ஏதோசொல்லிவிட்டு இறங்கி அவசரமாய் ஓடிவந்து ஏறியது என் நினைவுக்குவந்தது.

பேருந்து புறப்பட்டது அந்த பெண்ணின் விசும்பலை என்னால் கேட்கமுடிந்தது. அந்தநிகழ்வைப் பற்றிய பேச்சு பேருந்தில் அடங்க நேரம் ஆச்சு அன்று முழுவதும் ஒருவித குற்ற உணர்வுடனே பயணித்தேன்.
ஒரு ஆண் அக்கா, அத்தை, சித்தி என பெண்கள் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்தாலும் பெண்ணின் பிரச்சனையை அறியாமலே வளர்க்கப்படுகிறான் அதுவும் ஆண் ஆதிக்கம் ஊட்டி பெண்களாள் வளர்க்கப்படுகிறான்.

சாலை ஓரம் காரை நிறுத்தி சிறுநீர் கழிக்கும் ஆணுக்கு தம்முடன் வந்த பெண்ணுக்கும் சிறுநீர்கழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போகிறது. உடல் பற்றிய அறிவியல் அறிவு தெரியாமலே இருக்கிறோம்.
கடைவீதியில் நடந்துபோன பெண்ணின் கனுக்காலின் வழியே ரத்தம் வழிய அந்தபெண் நின்ற இடத்தில் சின்னதும் பெருசுமாய் ரத்ததிசுக்கள் கிடக்கக்கண்டு நடுங்கிப்போயிருக்கிறேன்.

இதுகுறித்து டாக்டரிடம் கேட்டுதான் தெரிந்துகொண்டேன். கருகலைப்பு நிகழ்ந்தால் இப்படி நடக்கும் என்றார்.

ஆண்களிடம் குழந்தை எந்தஉறுப்பு வழியே வெளிவரும் என்று கேளுங்கள். பதில்பலருக்கு தெரியாது.

பயணம் முடிந்து நான் மறுபடியும் படித்த கவிதை

ஈரப்பிசுபிசுப்போடு
உட்காந்து இருப்பீர்களா
ரத்தப் பெருக்கோடும்
உறங்க வேண்டிருக்கு
மனதை மட்டும் தூக்கிக்கொண்டு
அலைகிறீர்கள்தானே
கட்டுகள் ஒழிந்து என்றாவது
விடமுடிந்திருக்கிறதா
இந்த உடம்பை
தளர்ந்து போனால்
தாங்க மடிவேண்டும்தானே
அடிவயிற்றில்
பிரபஞ்ச பூதத்தின்
மூலாதார அவஸ்ரையோடு
பிறப்பின் வாசம்
உடலெங்கும் பரவிநிற்க
ரத்தம் தோய்ந்த ஆடைகளோடும்
நடுங்கும் கால்களோடும்
சாய்ந்து கொள்ளத் துழாவுகிறோம்
தொடாதே - தள்ளி நில்
என்கிறாள் அம்மாவும்
எறும்புக்கும் நாய்க்கும்
எப்படியோ இந்த அவஸ்தை.


------ அ.வெண்ணிலா

Saturday, January 9, 2010

தைவிக -20/01/10

மனிதன் Vs மனிதன்

விளையாட்டில் பலவகை உண்டு
மிக மோசமான விளையாட்டு
ஒன்று உணடு
அதுதான்

******************************************************

தேநீர் வரலாறு
அறிந்த பின்னே
ஒரு கோப்பை தேநீர்
ஒரு கோப்பை ரத்தமாக.

******************************************************

எங்கும் வியாபித்திருப்பது
விளம்பரமா
வியாபாரமா
கடவுளா
அன்பா
வம்பா

******************************************************

அப்பா
வேலை செய்வதிலிருந்து
ஓய்வு பெற்றுவிட்டார்
அம்மாவுக்கு
எப்போது ஓய்வு

******************************************************

நீர் நீ
வெண்நீர் நான்
விளாவிக்கொள்ளலாம்

******************************************************

ஒரு பிரச்சனையை தீர்க்க முடியவில்லையா
இன்னொர் பிரச்சனையை பெரிதாய்
ஊதிவிடு
பிரச்சனைகள் இருக்கும் வரைக்கும்
பிரச்சனை இல்லை - அரசு நடத்த
இது எல்லாம்
அரசியல் வாதிகளின் பிரச்சனை
இது வெல்லாம்
அவர்கள் சிந்திக்க
நாம் சிந்திக்க
தொலைக்காட்சி தொடர்கள்
ராணி 6 ராஜா யாரு?
மானாட மயிலாட
தொடை தசைஆட
பார்த்து ரசித்தால் போதும்.

******************************************************

இனி இப்படிதான்
நாய் அடிப்பட்டால்
பரிதாப பார்வை
விபத்து ஏற்பட்டால்
கூடும் கூட்டம்
உதவும் கரங்கள்
சாலை, கடைவீதி
கொலையென்றால்
தலைதெரிக்க ஓட்டம்
இனி இப்படித்தான் நடக்கும்
பழகிக்கொள்ளவேண்டும்
நாம்தான்
நாய்போன்றோ
விபத்துபோன்றோ
நாளை நமக்கும் நடக்கலாம்
அவசரத்தில் அடையாளம்
தெரியாமல்
ஆள்மாரி நம்மையும்
வெட்டலாம்
பழகிகொள்ளவேண்டும்
இனி இப்படித்தான்


******************************************************

குளத்தில் கல்விழ
பயந்து படர்ந்தன
மீன்களும், பாம்பும்
கரை ஓர தலைபிரட்டையும்
எனக்குதான் தெரியவில்லை
வாழ


******************************************************

நினைவு தினம்
பதட்ட தினமாக
பயம் தரும் தினமாக
வருந்தும் தினமாகவே
வருகிறது
நினைவு தினம்
மறக்கமுடியுமா
மறந்து விட்டாயா
பலபாச வேகவசனத்தில்
வீசும் நினைவு தினம்
இன்னொர் உயிர்க்கு
நினைவு தினத்திற்கான
ஏற்பாட்டு தினமாக
உளமார அனுசரிக்கப்படுகிறது
எங்கள் மண்ணில்


******************************************************


நடப்பதையெல்லாம்
பார்க்க பார்க்க
வாள் எடுத்துவெட்டனும் போலிருந்தது
எனக்கு
வெட்டினேன்
துண்டு துண்டாக
செத்த மீனையும்
கோழியையும்.


******************************************************

அக்ரஹாரம்
மாறாமல் கிடக்கிறது
அய்யர்கள்
இல்லை இப்போது

******************************************************

Monday, December 28, 2009

பொங்கல் வாழ்த்து அட்டைகள் - ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே !

மதம், மொழி சார்ந்த பண்டிகை சிறப்பு தினங்களுக்கு நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ வாழ்த்து அட்டைகளை அனுப்புவதை மறந்துவிட்டோம்.
இன்றைய அவசர வாழ்வில் நாம் வாழ்த்து அட்டை அனுப்ப மறந்ததற்கு காரணம், விஞ்ஞான வசதி. விஞ்ஞான வசதியால் நேர சிக்கனம், காசும் சிக்கனம். கைப்பேசியிலேயே வாழ்த்து சொல்லியும், குறுஞ்செய்தி அனுப்பியும் நம் வாழ்த்தை நம் அன்பின் வெளிப்பாட்டை இலவசமாக முடித்துவிடுகிறோம்.

வாழ்த்து அட்டைகள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியும், பூரிப்பும், அதில் இருக்கும் ஓவியங்களும், புகைப்படங்களும், அவை ஏற்படுத்தும் நினைவலைகளையும், குறுஞ்செய்திகள் ஏற்படுத்துவதில்லை.

குறுஞ்செய்திகள் நிரம்பிவிட்டால் யாரோ அனுப்பிய செய்தியை அழித்துவிட்டுத்தான் புதிய செய்திகளை பெறவேண்டி உள்ளது. ஆனால் வாழ்த்து அட்டைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவுகளை மலரச்செய்யும் நினைவுச் சின்னமாய் கூட இருக்கும்.

பள்ளி பருவத்தில், நண்பனுக்கு தெரியாமல் புத்தகத்தில் பொங்கல் வாழ்த்து வைப்பது. நாலாம் வகுப்பு படித்த தோழியின் பையில் அவளுக்குப் பிடிக்காத நடிகை சில்க்சுமிதா பொங்கல் வாழ்த்தை வைத்து அதைப்பார்த்த அவள் "டீச்சர் இந்த அசிங்கத்தை யாரோ வச்சுட்டாங்க" என்று அவள் அழுவதை ரசித்தது.

பொங்கல் முடிந்து எங்கள் வீட்டிற்கு இத்தனை வாழ்த்து வந்தது உறவினர் பெர்யரிச் சொல்லி இது எவ்வளவு அழகாக இருக்கும். பார் இது எங்க மாமா ஆந்திராவில் இருந்து எனக்கு அனுப்பின பொங்கல் வாழ்த்து என பெருமை பேசுவது உண்டு.

தெருவில் பிடிக்காத வீட்டிற்கு அஞ்சல் வில்லை ஒட்டாமல் அனுப்புவது, அந்த வீட்டார் அதை அபராதம் கட்டி வாங்கி அனுப்பியது யார் என்று தெரியாமல் குழம்பி அதை அவர் எல்லோரிடமும் சொல்லக் கண்டு களிப்பது.
பக்கத்து வீட்டுக்கு வாழ்த்து அனுப்புவது அதை தபால்காரர் பக்கத்து வீட்டிற்கு தரும்போது நம்மைப் பார்க்கும் கடுப்பான பார்வையில் ஒரு மகிழ்ச்சியென ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்து சுவையான விளையாட்டு நினைவுகளை தந்திருக்கின்றன.

குடும்பங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை இல்லாவிட்டாலும், அந்த வீட்டு குழந்தைகளுக்கு நம் வீட்டு குழந்தைகளின் பெயர்போட்டு வாழ்த்து அட்டை அனுப்புவது உண்டு. அதைப் பெரியவர்கள் கண்டும் காணாமல் விடுவதும் விட்டுப்போன பேச்சுக்கள் தொடர்வதும் உண்டு.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எனக்கு பொங்கல் வாழ்த்து அட்டை வந்தது. அனுப்பியது யார் என்றுத் தெரியவில்லை. வாழ்த்தில் அவரது முகவரி இல்லை. அவரது கையெழுத்தும் புரியவில்லை. அந்த மர்ம நண்பரின் பொங்கல் வாழ்த்தை ஒவ்வொரு பொங்கலுக்கும் எதிர்பார்த்து ஏமாறுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.

வெளிநாட்டில் வாழும் கணவனின் பிறந்த நாளுக்கோ, பண்டிகைக்கோ வாழ்த்து அட்டை புரட்டும் விரலிலும் தேடும் ஏக்க அன்பையும் கண்டிருக்கிறேன்.

காதல் தான் இன்று வாழ்த்து அட்டையை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நட்பில், காதலில், வாழ்த்து அட்டை அளிப்பது உறவை வலுப்படுத்த முன்மொழிவின் அடையாளம். காதலர்க்கு வாழ்த்து அட்டை செல்லம். பெரும்பாலானோர் வாழ்த்து அட்டை மூலமே தங்கள் காதலை உணர்த்தி இருக்கிறார்கள்.

நட்பில், குடும்ப உறவில் மகிழ்ச்சியூட்டும் ஒன்றான வாழ்த்து அனுப்பும் செயலை நாம் கைவிட்ட நிலையில் வாழ்த்து அட்டை சூட்சமத்தை உணர்ந்து கொண்டு வணிக நிறுவனங்கள் அதை கையில் எடுத்துள்ளன.
ரம்ஜான், தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகளுக்கு வாழ்த்து அனுப்புவதை கட்டாயப்பணியாக செய்கின்றன. தமிழ்நாட்டில் வணிகம் செய்து கொண்டு தமிழ்ப் பண்டிகைக்கும், தமிழ் வாடிக்கையாளர்க்கும் ஆங்கிலத்தில் வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்றன.

தீபாவளிகளை கொண்டாடும் அளவிற்கு நாம் நம் பொங்கலை கொண்டாடுவதில்லை. முன்பு கடைவீதியில் தீபாவளிக்கு வெடிக்கடை இருக்கும் அளவிற்கு பொங்கல் வாழ்த்து கடைகள் இருந்தன. இன்று வாழ்த்துக் கடையை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

தீபாவளிக்கு ரூ.100/- முதல் ஆயிரக்கணக்கில் வெடிவாங்கும் நாம் 2 ரூபாய் முதல் கிடைக்கும் பொங்கல் வாழ்த்தை பத்து உறவுக்கோ நட்புக்கோ நம்மால் அனுப்ப முடியவில்லையே ஏன்?

வாழ்த்து ரூ.2 + ரூ 4(அஞ்சல்)=ரூ6/-
10 நபர்க்ஷ்6=60 ருபாய் விரையமென நினைக்கிறோமோ?

ஏர்க்கலப்பை, சட்டக்கலப்பை, பிரம்பு பலகை, ஏன் கதிர் அரிவாள் என உழவுக்கருவிகள் பல கண்காட்சிக்கு சென்றுவிடும் நிலையில், பொங்கல் வாழ்த்து அட்டைகள் தான் நம் மண்ணின் வாழ்வியலையும் ஏன் விவசாயத்தையும் நினைவு படுத்திவருகின்றன.

பொங்கல் அடுப்பு வைத்து, மண்பானை பொங்கல் வைக்கும் நம் மரபையும், வாழ்த்து அனுப்பும் மனப்பங்கையும் விட்டொழித்து வருவது நமது வாழ்வியலை அழிக்கும் செயல். நமது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் குற்றம்.

நம் மண்ணின் நல்ல மரபை மறந்து, நன்றி மறந்தவராய் இருக்கிறோம் வாழ்த்து அனுப்பியவர்க்கு கூட நன்றி வாழ்த்து அனுப்புவதில்லை.
கடையில் நன்றி வாழ்த்து கேட்டேன் ( மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனம்). எல்லோரும் நமக்கும் நன்றியோடு இருக்கணும்னு எதிர்ப்பர்க்கிறோம். ஆனால் நாம யாருக்கும் நன்றியோடு இருப்பது இல்லை.

நன்றிகெட்ட உலகத்துல...
நன்றி கார்டு விக்குமா சார்!
நன்றி கார்டால நஷ்டம் சார், இப்ப
நன்றி காடெல்லாம் வருவது இல்ல சார், என்றார்.
நன்றியாய் இருந்தால் நஷ்டமா?

நம் மண்ணின் குணம் வாழ்த்துவது. வாழ்த்து அனுப்புவது நம்மை நிலைநிறுத்தும் அடையாளமாகத் தான் கருதுகிறேன்.

Wednesday, December 2, 2009

நம் குழந்தைகள் விளையாட கையில் எந்த பொருட்களைக் கொடுத்திருக்கிறோம்?

நம் குழந்தைகள் விளையாட கையில் எந்த பொருட்களைக் கொடுத்திருக்கிறோம்? பிளாஸ்டிக் பொம்மைகள், துப்பாக்கிகள், விதவிதமாய ஒலி ஒளி எழுப்பும் பொம்மைகள், சீன பொம்மைகள், கொரியன் விளையாட்டு பொருட்கள், Happy Birthday பாடல் பாடும் பொம்மைகள், டிராகன், கங்காரு பொம்மைகள் என்று நிறைய விளயாட்டுப் பொருட்களைக் கொடுக்கிறோம்.

நம் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொருட்கள் எல்லாம் வேறு ஒரு நாட்டின் கலாச்சார விளையாட்டுப் பொருட்கள்.
கலை, பாரம்பரியம், கலாச்சாரம், உயிரோட்டம் மிக்க நம் நாட்டு விளையாட்டு பொருட்களை தொலைத்துவிட்டு வெளிநாட்டு கலாச்சார விளையாட்டு பொருட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நமது கலாச்சார பொருட்களை நமே நம் மையால் அழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நம் நாட்டு விளையாட்டுப் பொருட்கள், மண் பொம்மை, மரப்பாச்சி, செப்புச் சாமான்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என ஒவ்வொறு மாநிலத்திற்கும், கலாச்சார பொருட்கள் நிறைய உண்டு.
பிள்ளையார், பிளாஸ்டிக் பிள்ளையார் ஆனதுபோல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை நவீனத்திற்கு(பிளாஸ்டிக்) மாறியது. ஆனால், அதன் சிறப்பும், அழகும், அதில் இல்லாமல் போனது.

நம் நாட்டு விளையாட்டுப் பொருட்களை குழந்தைகள் விளையாடும்போது, விளையாட்டோடு கதை சொல்லும் பழக்கமும் இருக்கிறது. சிங்கத்திற்கு ஒரு கதை, யானைக்கு ஒரு கதை, முயலுக்கு ஒரு கதை என்று வியளையாட்டோடு கதை கேட்டு வளர்ந்தனர் குழந்தைகள். அந்த கதையை சொல்லக் கேட்பது ஒரு இசைதான்.

இன்று கதை சொல்வது அரிதாகிவிட்டது.

குழந்தைகளின் சண்டை உடனே மறந்து, ஒன்றாய் விளயாடுவார்கள். இப்போது நம் பிள்ளைகள் யுத்த விளையாட்டுப் பொருட்களுடன் சண்டை போட்டு விளையாடுகிறார்கள். விளையாட்டில் ஏற்பட்ட சண்டையே அடுத்த விளையாட்டிற்கு காரணமாகி சண்டை போட்டு சுட்டு விளையாடுகிறார்கள். வரும் விருந்தினரையும் சுட்டுத் தள்ளுகிறார்கள்.

நம் பிள்ளைகள் மண்சார்ந்த விளையாட்டுக்களை மறந்தும், மற்க்கடித்தும், தொலைக்காட்சி, கணினி முன்னால் கட்டி வைத்திருக்கிறோம்.
நம் மண்ணின் விளையாட்டுக்கள் எத்தனை!

1. கண்ணாம்பொத்தி(கண்ணா மூச்சி)
2. ஓடி பிடித்தல்
3. நின்றால் பிடித்தல்
4. வீடுகட்டி விளையாடல்
5. கூட்டான்சோறு ஆக்குதல்
6. கம்ப விளையாட்டு.
7. சூ விளையாட்டு.
8. கபடி
9. கோலி
10. குச்சு விளையாட்டு.
11. கிட்டிப் புள்
12 பேய்ப்பந்து.
13. பிள்ளையார் பந்து.
14. மரக்குரங்கு
15 காயா? பழமா?(தண்ணீரில் விளையாடல்)
16. பம்பரம்
17. கால்தூகிற கணக்குப்பிள்ளை.
18. பூக்குதிரை.
19. பச்சக்குதிரை.
20 கிச்சுக்கிச்சு தாம்பலம்.
21. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்.
22. சட் பூட் திரி
23. ஒருகுடம் தண்ணீர் ஊத்தி
24. பூப்பறிக்க வருகிறோம்.
25. குலை குலையாய் முந்திரிக்கா.
26. புலியும் ஆடும்(சங்கிலி புங்கிலி கதவைத் திற நான் மாட்டேன் வேங்கைப்புலி)
27. நொண்டி.
28. கிளித்தட்டு(உப்பு எடுத்தல்).
29. பண்ணாங்குழில்(பல்லாங்குழி)
30. பாண்டி(சில்லு விளையாட்டு)
31. கும்மி.
32. ஊஞ்சல்(ம்ரத்தில் கட்டி விளையாடல்)
33.பருப்புச் சட்டி.
34. மோதிரம் வைத்தல்.
35. மண் வண்டி விளையாட்டு.
35. தட்டாம் பிடித்தல்.
37. ஓணா அடித்தல்.
38. தாயம்.
39. பரமபதம்.
40. குழந்தை திருவிழா விளையாட்டு(கிராம தவதையை களி மண்ணால் செய்து குழந்தைகள் திருவிழா எடுத்தல்)
41. ஒத்தையா ரெட்டையா.
42 ஆடுபுலி ஆட்டம்.
43. சிலம்பாட்டம்.
45. உரி அடித்தல்.
(தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் - ஞா.தேவநேயப்பாவாணர், பூம்புகார் பதிப்பகம்: வேளியீட்டு எண்.710, ஏப்ரல்-2006, ரூ.35/-. இதில் பாண்டிய, சோழ நாட்டு விளையாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்டத்தின் பெயர், ஆடுவோர் எண்ணிக்கை, ஆடுகருவி, ஆடும் இடம், ஆடும் முறை, ஆட்டத்தின் தோற்றம், ஆட்டத்தின் பயன் - என விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.)


மண் சார்ந்த விளையாட்டுக்கள் சோழர், சேரர், பாண்டிய நாட்டு விளையாட்டுக்கள் எத்தனையோ இருக்கின்றன. நம் விளையாட்டுக்களில் காலை, மதியம், மாலை, இரவு, வயல், வெளி, குளம், ஆறு என்றும் ஆடவர், சிருமி, இருபாலரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்களும் உண்டு.
பெரும்பாலான விளையாட்டுக்களுக்கு பாடல் உண்டு. விளையாட்டை முதலில் துவங்குவடு யார்? என்பதற்கே பல விளையாட்டுக்கள் உள்ளன. தோற்றவருக்கு தண்டனையாக பல விளையாட்டுக்களும் உள்ளன.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மண்சார்ந்த விளையாட்டுக்கள் நிறைய உண்டு. ஆனால், வெளிநாட்டு விளையாட்டும், விளையாட்டு பொம்மையும் விளையாட்டாகவே நம் நாட்டு விளையாட்டையும், விளையாட்டு பொம்மைகளையும் அழித்துவிட்டன.

நம் பிள்ளைகள் மண்ணை தொடாமலே மண்ணின் மணம், குணம் அறியாமலே பிள்ளைகளை வளர்க்கிறோம். வீதியெங்கும், காங்கிரீட் சாலை போட்டு மழலைகள் மண்ணை மிதிக்க முடியாமலும், மழை மண்ணை தொட முடியாமலும் மழலையர் மீதும் - மண்ணின் மீதும் - மழை மீதும் - வன்முறை செய்துகொண்டிருக்கிறோம்.

ஓடி விளையாட அக்குழந்தைகளுக்கு ஆவல்தான். எங்கே ஓடி விளையாடுவது? எங்கே இடம் இருக்கிறது? குழந்தைகளை மண்ணில் வியளையாட பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. பெற்றோர்களுக்குத் தான் இனி புத்ப்பாடல் பாடவேண்டும்.

குழந்தை பற்றியோ, குழந்தை வளர்க்கும் முறை பறறியோ தெரிவதில்லை புதுத் தம்பதியர்களுக்கு. சார்பதிவு அலுவலகத்தில் திருமண பதிவுக்கு வரும் தம்பதியர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றிய தேர்வு வைக்க வேண்டும். தேர்வில் தேறியவர்களுக்கே திருமணச்சான்று வழங்க வேண்டும். குழந்தை வளர்ப்பு முறை தேர்வில் இவர்கள் எப்படியாவது தேறலாம். தேர்வில் தேறியவர்களும் ஒருநாள் தம்பிள்ளை முன் வெட்கிப்போவார்கள்.


நம் பெற்றோர்களிடத்தில், என்னை ஏன் இந்தப் பள்ளியில் சேர்க்கவில்லை? இந்தக் கல்லூரியில் என்னை சேர்த்திருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் என்று நாம் கேட்பது போல், நம் பிள்ளைகள் நம் நாட்டு கலாச்சார விளையாட்டுப் பொருட்களை ஏன் எனக்கு விளையாட வாங்கித் தரவில்லை? எனக்கு ஏன் சிலம்பாட்டம் கற்றுத் தரவில்லை? ஏன் கபடி ஆடவில்லை என்று நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்து கேள்வி கேட்கும் நேரம் விரைவில் வரும்.

விஞ்ஞான வளர்ச்சியில் முன் அணியில் இருக்கும் நாம், மாறிவும் காலத்திற்கேற்ப நம் நாட்டு கலாச்சார விளையாட்டு பொம்மைகளை தாய்மொழியில் பாடல் பாடவைக்க முடியாதா?

மரப்பாச்சி பொம்மை - என்னமா தோழி பொம்மையை காணும் பாலடல் பாடச் செய்ய முடியாதா?

மரயானை - பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடாதா?
ஆமை - நான் வீடுப்படி ஏறி வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று பாட முடியாதா?

தலையாட்டி பொம்மை - தலையாட்டி தலையாட்டி வாழாதே பாடல் பாடவைக்க நம்மால் முடியாதா?

இந்திய்நாட்டு கலாச்சார பொம்மைகள் எப்போது தாய்மொழியில் பேசும்?
நம் தாய் மொழியில் பேசும் பொம்மைகளை நம் நாட்டிலும், வெளி நாட்டிலும் எப்போது நாம் விற்பனை செய்யப்போகிறோம்?

Thursday, October 29, 2009

செருப்பு அணியும் உரிமை கிடைத்தது எப்போது?

என் கடையில் இரண்டுபேர் செருப்பு டிசைன் பார்த்துக்கொண்டிருந்தார்க்ள்। இருவருமே உயர்சாதியினர். பணவாடை வேறு வீசியது

ஒருவர்
"கோவிலுக்கு போயிட்டு வந்து பாக்குறேன் செருப்ப காணோம்"

"சனிய விட்டுது வா போவோம்"

செருப்பை வாங்கிக்கொண்டு இருவரும் போய்விட்டார்கள்.

"தம்பி" என்றார் கடையின் ஓரமாக நின்ற வயதானவர். 80 வயது இருக்கும்.

"இப்ப வந்தவங்க செருப்பு தொலஞ்சத சனிய விட்டுதுன்னு சொல்லிட்டு போறாங்க...இந்த செருப்பு போட நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா?
செருப்ப சனியன்னு சொல்றாங்க அதுக்காக நாங்க எத்தனை தலைமுறை ஏங்கியிருக்கோம் தெரியுமா?

பொடியில நடக்க முடியாம நெழல தேடி தேடி ஓடி நடப்போம்। மாடுமேக்கிறப்ப சூடுதாங்க முடியாம கிடேறி மேல ஏறிப்போவோம்.

ஆத்த கடக்கையில சூடுதாங்க முடியாம கைப்புள்ளைய கீழப்போட்டு புள்ளமேல ஏறினின்று புள்ளையக்கொன்ன கதோயோட கதையெல்லாம் இருக்குப்பா...இந்த செருப்பு இல்லாம.

எம்பாட்ட, முப்பாட்ட யாரும் செருப்பு போட்டது இல்ல...எங்க வம்சத்துல நான் தான் செருப்பு போட்டவன். இந்த செருப்பு போட்டதுக்காக என்னை எவ்வளவு அவமானப்படுத்திருக்காங்க தெரியுமா?

மனுசன் எதுக்கு ஆசைப்படுறானோ அதால அடிவாங்குறது இல்ல
செருப்பு போட ஆசைப்பட்டதுக்காக அதால அடிவாங்கி இருக்கேன் -நான்.

காலம் மாறீப்போச்சு செருப்போட நாங்கப்பட்ட கஷ்டம் எல்லாம் இப்ப இருக்கற மக்களுக்கு எங்கே தெரியுது.

அவாளும் சட்டை போடக்கூடாது தம்பி. இப்பதா காலம் மாறிப்போச்சே" என்று பெரியவர் நடை நடந்தார் என்னை கணக்கவைத்துவிட்டு.

செருப்பு இந்த சமூகத்தில் எப்படி கருதப்படுகிறது
ஒருவரை இழிவு செய்ய
நமது கோபத்தின் எச்சமாக
அதிகார அந்தஸ்தின் வெளிப்பாடாக
அவன் என் கால்ல போடுற செருப்புக்கு சமம்
(செருப்புதான் மனிதனை தாங்குகிறது)
அவன் என் செருப்புல இருக்குற தூசுக்கு சமம்.
மனிதனை அவமதிக்கும் ஒன்றாக செருப்பு எப்படி மாறியது?

செருப்பு இழிவான சொல்லாகக்கூட கருதப்படுகிறது.
அரியணையில் செருப்பை வைத்து நாடாண்ட தேசம் இது - என்கிறது ராமாயணம்.
மன்னர் காலத்தில் படைவீரர்கள் செருப்பு அணிந்தார்களா?

யோசித்தால்.....

முதலில் அல்லா சாதிக்காரர்களும் படைவீரர்களாக இருந்தார்களா? என்ற கேல்வி எழுகிறது. எல்லா சாதிக்காரர்களும் படைவீரர்களாகவும் இல்லை. எல்லா படைவீரர்களும் செருப்பு அனிந்ததற்கான ஆதாரமும் இல்லை.

சேர, சோழ, பாண்டிய படைவீரர்கள் செருப்பு அணிந்தார்களா என்று ஆராயவேண்டி உள்ளது. கட்டபொம்மன், ஊமைத்துரை படையில் அனைத்து சாதியினரும் படைவீரர்களாக இருந்து உள்ளனர். அனைவரும் செருப்பு அணிந்தும் உள்ளனர்.
சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரஸ்காரர்கள் கீழத்தெருக்களுக்கு வந்தது இல்லை।

ஆங்கிலேயர் காலத்துல இரும்புப்பாதை அமைக்க, சாலைப்போட பயன்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் சாக்கை காலில் சுத்திக்கொண்டும், காலுக்கடியில் சிறிய மரப்பலகையை வைத்து துணிசுத்திக்கொண்டும் வேலை செய்து உள்ளனர்.

ஆங்கிலேய படையில் அனைத்து சாதியினரும் படைவீரராக இருக்கவில்லை, தாழ்ந்த சாதியினர் படையில் சேரும் போது தான் அவர்களால் செருப்பு அணியமுடிந்தது।

சுரங்க தொழிலாளர்களாக வேலைப்பார்க்க கட்டயப்படுத்தப்பட்ட போது தான் பாலசாதியினர் செருப்பு(பூட்டு) அணியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கீதாரிகளும், மேய்ப்பவர்களும் செருப்பு அணிய முடியாமல் பட்ட கஷ்டங்களும், உயிர் இழப்புக்களும் அதிகம்। செருப்பு போடுவது ஒவ்வொரு தனி மனிதனின் வெகுகால தொடர் ஆசை நிறைவேறிய தருணமாக 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் அமைந்தது.

செருப்பு போடவும், குடைப்பிடிக்கவும், வேட்டியை தழைய கட்டவும், தோளில் துண்டுப்போடவும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு என்று பெரியார், அம்பேத்கார், இடதுசாரிகள் தொடர் போராட்டத்தின் மூலம் செருப்பு அணியும் உரிமை கிடைத்தது। இந்த உரிமை கிடக்க கல்வியும், ஆங்கிலேய அரசும் காரண்மாக இருந்தது எனலாம்.

தொற்று நோயால் பலர் இறந்தபோது தொற்றூனோய் பரவாமல் தடுக்க கட்டாயம் செருப்பு அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போதுதான் பெரும்பாலானோர் செருப்பு அணிந்து உள்ளனர்.

"சமீப ஆண்டுகாலமாக செருப்பு இல்லாமல் கல்லூரி செல்லும் மாணவர்களை நான் பார்த்ததில்லை. ஆனால், இன்றும் செருப்பு இல்லாமல் கல்லூரி செல்லும் மாணவிகளை பார்க்க முடிகிறது. இன்றைய கல்லூரி உலகில் செருப்பு இல்லாமல் நடக்கும் மாணவிகளின் கஷ்டம் உணரமுடிகிறதா நம்மால்?"