Monday, February 1, 2010

இப்படியெல்லாம் கேட்டா யாருக்குத் தான் கோவம் வராது ?

எங்க ஊர் கிராமம். தெருப் பெண்களிடையே சலசலப்பு, எரிச்சல், கோபம், கூச்சம், என பல உணர்வு நிலைமுகங்களோடு பெண்கள் நின்றனர்.

என்னவென்று கேட்டேன்.

என்னத்த சொல்றது என்றாள் ஐந்தம்மா. என்னா கேள்வி கேட்குது அந்த பொம்பளப்புள்ள....கொஞ்சகூட வெக்கம் இல்லாம....

நிறையபேரு இப்படிதா கேள்விகேட்டு எழுதிட்டு போறாங்க... என்னத்த செஞ்சு கிழிச்சாங்க. இது ஒரு பொழப்புபோல.

தெருமுனையில் இளம்வயது பெண்களும், ஆண்களும் நிற்க, அவர்கள் சுகாதாரம், கழிவறை குறித்து கணக்குஎடுக்க வந்திருந்தார்கள்.
(இவர்களுக்கு உதவ ஊராட்சித்தலைவரும், மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட்டுள்ளார். இந்தக் கருத்துக்கணிப்பை நடத்துவது வெளிநாட்டுப் பல்கலைக் கழகம்.)

பெண்களிடம் தனியாக கேள்விகேட்க, தனிப் பெண்கள் குழு வந்திருக்கிறார்கள். அந்த படிவத்தில் 131க்கும் மேல் கேள்விகள் இருந்தன. அவற்றில் சில.

மாப்பிள்ளை பார்க்கும்போது அவர் உங்களுக்கு வீட்டில் சுகாதார வசதி செய்துதர முன்வந்தாரா? இதுசம்மந்தமாக பேச்சுவார்த்தை அப்பொழுது நடந்ததா?
எங்கு நீங்கள் குளிப்பீர்கள்?
வீட்டுடன் உள்ளமூடிய குளியலறையா? என 8 கேள்விகள்.
இந்த இடத்தில் குளிப்பதுபற்றி என்ன உணர்கிறீர்கள்.
அதில் ஒரு கேள்வி (சமயம், கலாச்சாரம் சார்ந்தது)

என்ன இடைவெளியில் குளிப்பீர்கள்?
தினமும்,
வாரத்திற்கு 2 (அ) 3 முறை
வாரம் ஒரு முறை
மாதம் ஒரு முறை


பொதுவாக ஒரு நாளில் எந்த நேரத்தில் குளிப்பீர்கள்?
ஆடை இல்லாமல் குளிப்பீர்களா?
எங்கு நீங்கள் கழிப்பிடத்திற்கு செல்வீர்கள்?
இந்த இடத்தை பற்றி என்ன உணர்கிறீர்கள்?
(10 கேள்வி) அதில் ஒன்று
சமயம் மற்றும் கலாச்சாரத்தை சார்ந்ததாகும்.

இந்த இடத்தில் வாடை (அ) பூச்சி உள்ளதா?
பொதுவாக எந்த நேரம் மலம் கழிக்க செல்வீர்கள்?
நாள் ஒன்றுக்கு எத்தனை முறை சிறுநீர், மலம் கழிப்பீர்கள்?
சிறுநீர் கழிக்க தனியாக செல்வீர்களா (அ) உடன் யாரையாவது அழைத்து செல்வீர்களா?
கழிப்பிடம் போகும்போது காலணி அணிவீர்களா?

கழிப்பிடம் சென்றபின் எப்படி சுத்தம் செய்வீர்கள்
தண்ணீரால் கழுவுதல்
கற்கல் மற்றும் இலை
மண்ணால் சுத்தம் செய்தல்
சுத்தம் செய்வது இல்லை

கழிப்பிடம் சென்றபின் உங்கள் கைகளை சுத்தம் செய்வீர்களா?

இப்படியெல்லாம் கேள்விகேட்டா நம்மஊர் பொம்பளைங்க கோபப்படாம என்ன செய்வாங்க.

இப்போது கேட்கப்படும் கேள்விகள் நீங்கள் மாதவிடாயின்பொழுது என்ன செய்வீர்கள் என்பது பற்றியது. எங்களுக்கு தெரியும் இதுபோன்ற தனிப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில்கூற விரும்பமாட்டிற்கள் என்று. ஆனால், எங்கள் ஆய்விற்கு உங்களது கருத்து மிகவும் உபயோகமாக இருக்கும் என கேள்விகள் தொடர்கின்றன.

இன்னும் உங்களுக்கு மாதவிடாய் நடக்கிறதா?
மாதவிடாய் ஏற்படும்போது என்னமாதிரியான பாதுகாப்பு செய்வீர்கள்?(துணி, பஞ்சு, நேப்கின்)
எத்தனை முறை துணியை மாற்றுவீர்கள்?
எப்படி அந்த துணியை துவைப்பீர்கள்?
எப்படி அதை அப்புறப்படுத்துவீர்கள்?
துணியை தூக்கி எறிவதற்கு முன்பு மாதவிடாயின்போது பாதுகாப்பிற்காக எவ்வளவு நாட்கள் அந்த துணியை பயன்படுத்துவீர்கள்?

பெரும்பாலும் இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை. காரணம் சுகாதார விழிப்புணர்வு இல்லை. தங்களுடைய சுத்தம் பற்றி பெண்கள் அக்கறை கொள்வதில்லை, வெளியே பேசுவதும் இல்லை.

பழைய ஜாக்கட்டையும், உள்பாவாடையும் கைப்பிடி துணியாக பயண்படுத்தும் சமையல் கட்டுகள் நிறைய இருக்கின்றன. இயற்கை உபாதை, உபாதையால் ஏற்படும் துண்பம் குறித்து வெளியே பேசாத பெண்கள் இருக்கின்றார்கள்
இதற்கு கிராமம் நகரம் என்று பாகுப்பாடு கிடையாது.
அ.வெண்ணிலாவின் வரி(லி)களைத்தான் சொல்ல தோன்றுகிறது.

காக்கைக்குத் தெரியாது
எருதின் வலி
சரிதான்
எருதுகளுக்காவது தெரியுமா?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தொலைக்க வேண்டியது பெண் என்ற அடையாளத்தைத்தான்.

பயணங்களில் பெண்கள் உபாதை கழிப்பதைப்பற்றி சிந்திப்பது இல்லை. சுற்றுலா செல்லும் வாகனங்கள் நீர்நிலைகளில் நிறுத்திவிடுகிறார்கள். பெண்களை பற்றி சிந்திப்பது இல்லை.

முற்போக்கு இலக்கிய வாதிகளின் இலக்கியகூட்டம் முதல் மாநாடு நடத்தும் அமைப்புகள், கட்சிகள் வரை, பெண்கள் கழிவறை குறித்தோ தங்கும் வசதி குறித்தோ அக்கறை கொள்வதில்லை.

பகலில் சென்னைக்கு பேருந்தில் பயணித்தபோது பேருந்துடயர் வெடித்துவிட்டது. டயர் மாற்றும் வேலை நடந்தது ஐன்னல் ஓரம் பெண்கள் உட்கார்திருக்க அதுகுறித்தான எந்த உணர்வும் இல்லாமல் ஆண்கள் சிறுநீர் கழிக்கிறார்கள்.

எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வேகமாய் இறங்கி திரும்பி திரும்பி பார்த்து வரிசையாய் நின்ற ஆண் கூட்டத்தை கடந்து சாலைஓரம் சென்று சுடிதாரை அவிழ்த்து உட்காந்தார். அவ்வளவுதான் அங்கிருந்த ஆண்கூட்டம் தலைதெரிக்க ஓடியது. கர்மம் கர்மம் பட்டப்பகல்ல மானம்போச்சு கலிகாலம் இப்படி ஆணவ வார்த்தைகள் ஆங்காங்கே எழுந்தன.

அந்தபெண் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அந்த பெண்ணின் உடல்நிலை சரிஇல்லாம் இருக்க வேண்டும். பேருந்து நின்ற இரண்டு ஊர்களிலும் ஓட்டுனரிடம் ஏதோசொல்லிவிட்டு இறங்கி அவசரமாய் ஓடிவந்து ஏறியது என் நினைவுக்குவந்தது.

பேருந்து புறப்பட்டது அந்த பெண்ணின் விசும்பலை என்னால் கேட்கமுடிந்தது. அந்தநிகழ்வைப் பற்றிய பேச்சு பேருந்தில் அடங்க நேரம் ஆச்சு அன்று முழுவதும் ஒருவித குற்ற உணர்வுடனே பயணித்தேன்.
ஒரு ஆண் அக்கா, அத்தை, சித்தி என பெண்கள் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்தாலும் பெண்ணின் பிரச்சனையை அறியாமலே வளர்க்கப்படுகிறான் அதுவும் ஆண் ஆதிக்கம் ஊட்டி பெண்களாள் வளர்க்கப்படுகிறான்.

சாலை ஓரம் காரை நிறுத்தி சிறுநீர் கழிக்கும் ஆணுக்கு தம்முடன் வந்த பெண்ணுக்கும் சிறுநீர்கழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போகிறது. உடல் பற்றிய அறிவியல் அறிவு தெரியாமலே இருக்கிறோம்.
கடைவீதியில் நடந்துபோன பெண்ணின் கனுக்காலின் வழியே ரத்தம் வழிய அந்தபெண் நின்ற இடத்தில் சின்னதும் பெருசுமாய் ரத்ததிசுக்கள் கிடக்கக்கண்டு நடுங்கிப்போயிருக்கிறேன்.

இதுகுறித்து டாக்டரிடம் கேட்டுதான் தெரிந்துகொண்டேன். கருகலைப்பு நிகழ்ந்தால் இப்படி நடக்கும் என்றார்.

ஆண்களிடம் குழந்தை எந்தஉறுப்பு வழியே வெளிவரும் என்று கேளுங்கள். பதில்பலருக்கு தெரியாது.

பயணம் முடிந்து நான் மறுபடியும் படித்த கவிதை

ஈரப்பிசுபிசுப்போடு
உட்காந்து இருப்பீர்களா
ரத்தப் பெருக்கோடும்
உறங்க வேண்டிருக்கு
மனதை மட்டும் தூக்கிக்கொண்டு
அலைகிறீர்கள்தானே
கட்டுகள் ஒழிந்து என்றாவது
விடமுடிந்திருக்கிறதா
இந்த உடம்பை
தளர்ந்து போனால்
தாங்க மடிவேண்டும்தானே
அடிவயிற்றில்
பிரபஞ்ச பூதத்தின்
மூலாதார அவஸ்ரையோடு
பிறப்பின் வாசம்
உடலெங்கும் பரவிநிற்க
ரத்தம் தோய்ந்த ஆடைகளோடும்
நடுங்கும் கால்களோடும்
சாய்ந்து கொள்ளத் துழாவுகிறோம்
தொடாதே - தள்ளி நில்
என்கிறாள் அம்மாவும்
எறும்புக்கும் நாய்க்கும்
எப்படியோ இந்த அவஸ்தை.


------ அ.வெண்ணிலா

2 comments:

கபிலன் said...

"இப்படியெல்லாம் கேட்டா யாருக்குத் தான் கோவம் வராது ? "

கோவம் வரத்தான் செய்யும்!

அண்ணாமலையான் said...

ஆமாங்க சரியா சொன்னீங்க....